search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தொப்பூர் மலைப்பாதை"

    தொப்பூர் மலைப்பாதையில் தனியார் ஆம்னி பஸ் தீப்பிடித்து எரிந்ததில் 36 பயணிகள் உயிர் தப்பினர். பஸ் எரிந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #Omnibus #Fireaccident
    தருமபுரி:

    மதுரையில் இருந்து பெங்களூருவுக்கு பிரபல தனியார் நிறுவன ஆம்னி சொகுசு பஸ் புறப்பட்டு வந்தது. இந்த பஸ்சை சேலம் மாவட்டம் ஆத்தூரை சேர்ந்த மாதேஸ்வரன் (வயது 58) என்பவர் ஓட்டி வந்தார்.

    இந்த பஸ்சில் 36 பயணிகள் இருந்தனர். இந்த பஸ் திண்டுக்கல், கரூர், சேலம் வழியாக இன்று அதிகாலை 4.30 மணிக்கு தருமபுரி மாவட்டம் தொப்பூர் மலைப்பாதையில் ஆஞ்சநேயர் கோவில் அருகே வந்து கொண்டு இருந்தது. அப்போது பஸ்சின் பின் பகுதியில் உள்ள ஏர்கண்டி‌ஷன் எந்திரத்தில் புகை வந்தது. இதை பின்னால் வந்த ஒரு வாகன டிரைவர் கண்டுபிடித்து ஆம்னி பஸ்சின் டிரைவர் மாதேஸ்வரனிடம் கூறினார். உடனே அவர் பஸ்சை ரோட்டு ஓரமாக நிறுத்திவிட்டார். ஆஞ்சநேயர் கோவில் குழாயில் உள்ள தண்ணீரை எடுத்து வந்து அதில் டிரைவர் ஊற்றினார். பின்னர் பஸ்சில் இருந்த பயணிகள் 36 பேரையும் கீழே இறக்கி மாற்று பஸ்களில் பெங்களூருவுக்கு அனுப்பி வைத்தார்.

    இதுகுறித்து அந்த தனியார் நிறுவன மெக்கானிக்குக்கு டிரைவர் போனில் தகவல் தெரிவித்தார். ஆனால் மெக்கானிக் வர காலதாமதம் ஆனது. பின்னர் தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தருமபுரியில் இருந்து சென்ற தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.


    ஆம்னி பஸ் தீப்பிடித்து எரியும் காட்சி.

    இந்த நிலையில் இன்று காலை 6 மணிக்கு மீண்டும் பஸ்சில் தீப்பிடித்தது. உடனே ஆம்னி பஸ் டிரைவரும், பொதுமக்களும் அந்த வழியே வந்த வாகனங்களை ஆங்காங்கே நிறுத்திவிட்டனர். இதனால் அந்த பஸ்சில் இருந்து மற்ற வாகனங்களுக்கு தீ பரவுவது தடுக்கப்பட்டது. இதுகுறித்து மீண்டும் தீயணைப்பு படைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு படையினர் மீண்டும் வந்து தீயை அணைத்தனர்.

    பஸ் எரிந்த சம்பவம் தொடர்பாக தொப்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பஸ் எரிய காரணம் என்ன? என்று பஸ்சின் டிரைவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இந்த சம்பவம் நடந்தபோது பயணிகள் அனைவரும் நன்றாக தூங்கிக்கொண்டு இருந்தனர். டிரைவர் உடனடியாக பஸ்சை நிறுத்தி பயணிகளை எழுப்பி விட்டதால் அவர்கள் அனைவரும் உயிர் தப்பினார்கள். மேலும் அந்த வழியே வந்த வாகனங்களை நிறுத்திவிட்டதால் மேலும் வாகனங்கள் எரிவதும் தடுக்கப்பட்டது.

    கடந்த 2 மாதத்துக்கு முன்பு இதே மலைப்பாதையில் தேங்காய் எண்ணெய் லாரிக்கு டிரைவர் தீவைத்தார். அந்த லாரி பின்னோக்கி வந்தபோது இன்னொரு கியாஸ் டேங்கர் லாரி, 2 கார்கள் எரிந்து சேதமாகின. நல்லவேளை தனியார் ஆம்னி பஸ் எரிந்தபோது அங்கிருந்த பொதுமக்களின் உதவியால் பெரிய அளவில் சேதம் அடைவது தடுக்கப்பட்டது.

    இந்த சம்பவத்தினால் அந்த பாதையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வாகனங்கள் மெதுவாக ஊர்ந்து சென்றன.  #Omnibus #Fireaccident

    ×